ADDED : ஜூலை 23, 2025 02:29 AM
ஹனோய்:பிலிப்பைன்ஸ் கடலில் உருவான விபா புயல் நேற்று வியட்நாமில் கரையை கடந்த போது, சூறாவளியாக மாறி, அந்நாட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.
தென் கிழக்கு ஆசிய தீவு நாடான பிலிப்பைன்சுக்கு வடக்கே விபா புயல் உருவானது. இது தைவான், ஹாங்காங் நாடுகளுக்கு அருகே நகர்ந்து, அங்கெல்லாம் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று காலை வியட்நாம் கரையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு, 140 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் சூறாவளியாக சுழன்றடித்தது.
இதனால் தலைநகர் ஹனோய், ஹுங் யென் மாகாணம் ஆகிய பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்தன. இதனால் மின் ஒயர்கள் அறுந்து மின்சாரம் தடைப்பட்டது.
மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தன. வடக்கு வியட்நாம் நகரங்களுக்கு செல்ல இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹையாங் மற்றும் குவாங் நின் மாகாணத்தில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.
மழை வெள்ளம் காரணமாக 80,000 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். மூன்று பேர் புயல் பாதிப்பால் உயிரிழந்தனர். சீனாவின் தென் பகுதியிலும், இந்த புயலால் கனமழை பெய்தது.