வாஷிங்டன் வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; ஆக.18ல் டிரம்புடன் முக்கிய சந்திப்பு
வாஷிங்டன் வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; ஆக.18ல் டிரம்புடன் முக்கிய சந்திப்பு
ADDED : ஆக 16, 2025 02:02 PM

கீவ்: அமெரிக்க அதிபர் டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பு வரும் திங்கட்கிழமை வாஷிங்டனில் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்தும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் சந்தித்து பேசிய போது, போர்நிறுத்தம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த சந்திப்பில் புரிதல் ஏற்பட்டு உள்ளது, ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை என்று இருநாடுகளின் அதிபர்களும் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துவிட்டனர். உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் நடத்திய 3 மணி நேர சந்திப்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சர்வதேச அரசியலை உற்றுநோக்குபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் சந்திக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:
நாங்கள் இருவரும் நீண்ட மற்றும் அர்த்தமுள்ள சந்திப்பை (தொலைபேசியில் பேசியது) நிகழ்த்தினோம். ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கு நான் தயாராக உள்ளேன். டிரம்ப் அழைப்பின் பேரில் நான் வரும் திங்கட்கிழமை வாஷிங்டன் பயணிக்க இருக்கிறேன்.
அங்கு ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி விரிவாக விவாதிக்க இருக்கிறேன். எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
அமைதியை ஏற்படுத்த முடிந்த அதிகபட்ச அளவு முயற்சிளை எடுக்க உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் பேசியது என்ன, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி என்னிடம் டிரம்ப் தெரிவித்தார். உக்ரைன் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள சாதகமான சமிக்ஞைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான ஒரு முத்தரப்பு சந்திப்பை ஏற்படுத்துவதற்கான டிரம்பின் முன்மொழிவை ஆதரிக்கிறோம். இதில் முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்படலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அலாஸ்காவில் புடினுடன் சந்திப்பை முடித்த பின்னர், ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் தொடர்பு கொண்டுள்ளதாடு மட்டுமல்லாமல் நேட்டோ நாடுகளின் தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்து சர்வதேச அரசியல் நிலவரங்கள் பற்றியும் விவாதித்து இருக்கிறார்.