ADDED : ஆக 06, 2011 03:35 AM
கிவிவ்: ரஷ்யாவுடன் மேற்கொண்ட காஸ் விநியோக ஒப்பந்தத்தில் ஊழல் புரிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கோர்ட் உத்தரவை அடுத்து உக்ரைன் நாட்டின் முன்னாள் பிரதமர் யூலியா டைமோஷென்கோ நேற்று கைது செய்யப்பட்டார்.
உக்ரைன் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் யூலியா டைமோஷென்கோ (51) இவர் கடந்த 2005, 2007-2010 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 2010-ம் ஆண்டு அந்நாட்டு பாராளுமன்றம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் படி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு இவர் பிரதமராக இருந்த போது ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனமான கேஸ்புரோம் நிறுவனத்துடன் 425 மில்லியன் டாலர் அளவு ஒப்பந்தம் மேற்கொண்டார். இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து உக்ரைன் கோர்டில் வழக்கு நடந்து வந்தது. இவர் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டது. எனினும் ஜாமினில் இருந்ததால் வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் யூலியா டைமோஷென்கோவை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இவர் மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட யூலியா டைமோஷென்கோ கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிபர் விக்டர் யானுகோவைச் என்னை பழிவாங்கிவிட்டதாக கூறினார்.