ஈரானின் அணுசக்தி மையங்கள்; ஐ.நா., குழு விரைவில் சோதனை நடத்த திட்டம்
ஈரானின் அணுசக்தி மையங்கள்; ஐ.நா., குழு விரைவில் சோதனை நடத்த திட்டம்
ADDED : ஜூன் 24, 2026 08:56 PM

டோக்கியோ: ஈரானில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் மையங்களில், ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் ஐ.நா., சபையின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகமை நிபுணர்கள் குழு விரைவில் நேரில் ஆய்வு நடத்துவார்கள் என்று அதன் தலைவர் ரபேல் மரியானோ குரோசி அறிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க முக்கிய காரணமே, அணுசக்தி விவகாரம் தான். ஈரானிடம் தற்போது 10 அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தேவையான, 60 சதவீதத்திற்கும் அதிகமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு உள்ளதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் தங்கள் அணுசக்தி திட்டம் அமைதிக்கானது மட்டுமே என்று ஈரான் கூறி வருகிறது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் 12 நாள் தாக்குதல் நடத்தின. அதன்பின், செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைக்கப்பட்டுள்ள முக்கிய அணு உலைகளுக்குள் நுழைய ஐ.நா., ஆய்வாளர்களுக்கு ஈரான் அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் அதிபர்கள் சமீபத்தில் தற்காலிக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அணுசக்தி நிபந்தனை குறித்து ஐ.ஏ.இ.ஏ., தலைவர் ரபேல் மரியானோ குரோசி விளக்கம் அளித்துள்ளார். ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது:
இரு நாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், ஈரானின் அணுசக்தி செயல்பாடுகள் மற்றும் அணு உலைகள் அனைத்தும் ஐ.ஏ.இ.ஏ., கண்காணிப்பின் கீழ் தான் இயங்கும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக வெளியாகும் முரண்பட்ட அறிக்கைகளை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், ஒப்பந்தப்படி ஆய்வு நடத்தியே தீருவோம். இது நாளை மறுநாளோ, ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ நடக்கலாம். தேதி முக்கியமல்ல, ஆனால் இந்த ஆய்வு நிச்சயம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
