கியூபாவில் தாங்கமுடியாத கொசு தொல்லை 33 சதவீத மக்கள் நோய்களால் பாதிப்பு
கியூபாவில் தாங்கமுடியாத கொசு தொல்லை 33 சதவீத மக்கள் நோய்களால் பாதிப்பு
ADDED : நவ 15, 2025 11:04 PM
ஹவானா: கியூபா நாட்டில் கொசுக்களால் பரவும் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு மூன்றில் ஒரு பங்கு மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
வட அமெரிக்க நாடான கியூபாவில், டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் நீண்டகால பிரச்னையாகவே இருந்து வருகின்றன. அதை ஒழிக்க கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை, கொரோனா பரவல் போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, பொது சுகாதார அமைச்சகம் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது. இதனால் கொசு மருந்து தெளிப்பு, சாலையோர குப்பையை சுத்தம் செய்தல், கால்வாய்கள் துார்வாருதல் போன்ற எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக கியூபாவில், கொசுக்கள் பெருகி, நோய்களின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அங்கு ஏ.டி.எஸ்., என்ற கொசு மூலம் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் காய்ச்சலால் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பொது சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோயியல் இயக்குநர் பிரான்சிஸ்கோ டுரான் தெரிவித்துள்ளார்.
கொசுக்களால் ஏற்படும் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கண்டறியும் ஆராய்ச்சி திட்டங்கள் தீ விரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தலைநகர் ஹவானாவில் டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருவதாகவும் பிரான்சிஸ்கோ தெரிவித்தார்.
ஏழ்மையான நாடான கியூபாவில், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைக்கே அல்லாடும் நிலை உள்ளது. இதில் கொசு விரட்டிகளை வாங்குவது சாத்தியமில்லாத ஒன்று என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடிக்கடி ஏற்படும் மின் தடை காரணமாகவும், வெப்பத்தை தணிக்க ஜன்னல்கள், கதவுகளை திறந்து வைப்பதால் கொசுக்கடிக்கு ஆளாவதாகவும் மக்கள் குமுறுகின்றனர்.
நடப்பாண்டில் உலகம் முழுதும் இதுவரை சிக்குன்குனியாவால் 3 லட்சத்து 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நோய் தடுப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 16 நாடுகளில் 145 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

