நேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பதவி விலகல் மாஜி பிரதமர் மனைவி உயிருடன் எரிப்பு
நேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பதவி விலகல் மாஜி பிரதமர் மனைவி உயிருடன் எரிப்பு
ADDED : செப் 10, 2025 03:44 AM
காத்மாண்டு:நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடைக்கு எதிரான கலவரம், இரண்டாவது நாளான நேற்று உச்சமடைந்தது. பார்லிமென்ட், உச்ச நீதிமன்றம் மற்றும் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு கலவர கும்பல் தீ வைத்தது. இதில், வீட்டிலிருந்த அவரது மனைவி ராஜ்யலட்சுமி உயிரிழந்தார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகள் வகுக்குமாறு அரசுக்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவகாசம் அதன்படி விதிகளை உருவாக்கிய அரசு, அதன் கீழ் சமூக வலைதளங்களை உள்நாட்டில் பதிவு செய்வது தொடர்பாக, ஐந்து முறைக்கு மேல் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. இறுதியாக ஒரு வார அவகாசம் வழங்கியது.
ஆனால், சமூக வலைதள நிறுவனங்கள் அவகாசம் முடிந்தும் அவ்வாறு பதிவு செய்யவில்லை. பதிவு செய்தால் உள்ளூரில் அலுவலகங்களை அமைக்க வேண்டும்; உள்ளூர் பிரதிநிதிகள், உள்ளடக்க மேற்பார்வை அதிகாரிகளை நியமிக்க வேண்டும்; வழக்குகளை சந்திக்க வேண்டும்.
நேபாளம் சிறிய சந்தை என்பதால், இந்த விதிகள் அதிக செலவு மற்றும் நிர்வாக சுமையை ஏற்படுத்தும் என கருதி, அரசின் உத்தரவுகளை, 'வாட்ஸாப், பேஸ்புக், எக்ஸ்' உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் புறக்கணித்தன.
இதனால், 'வாட்ஸாப், பேஸ்புக், யு டியூப், எக்ஸ்' உட்பட, 26 சமூக வலை தளங்களை அரசு முடக்கியது.
அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நேபாள இளைஞர்கள், மாணவர்கள் காத்மாண்டு, பொகாரா, பிரத்நகர், மற்றும் பரத்பூர் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
19 பேர் பலி காத்மாண்டுவில் பார்லிமென்டை நோக்கி பேரணியாக சென்ற போது போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர்.
இதனால் மோதல் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 19 பேர் பலியாகினர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதையடுத்து சமூக வலைதளங்களுக்கானதடையை அரசு நீக்கியது. மேலும் நாடு முழுதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உருமாற்றம்
ஆனால் இரண்டாவது நாளாக நேற்று கலவரம் உச்சமடைந்தது. இதில் தலைநகர் காத்மாண்டு சின்னாபின்னமானது. சமூக வலைதள தடைக்கு எதிராக துவங்கிய போராட்டம், அரசின் ஊழல், வாரிசு அரசியல் போன்றவற்றுக்கு எதிரான கலவரமாக உருமாறியது.காத்மாண்டுவில் உள்ள நேபாள பார்லிமென்ட் வளாகத்திற்குள் நேற்று நுழைந்த இளைஞர்கள், மேற்கு நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைந்து, தீ வைத்தனர். அதன் அருகில் உள்ள நேபாள அரசின் செயலகமான சிங்க தர்பார், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றையும் தீ வைத்து எரித்தனர்.இந்த கலவரங்களில் ஆளும் கூட்டணி கட்சிகளின் அலுவலகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் அலுவலகங்களை இளைஞர்கள் சூறையாடினர்.நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள் தலைநகரில் நிலைமை மோசமானது. இதனால் ராணுவம் தலையிட்டு, நிலைமையை சீராக்க வேண்டும் என ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெலிடம் பிரதமர் ஒலி வலியுறுத்தினார்.
அதற்கு ராணுவ தளபதி, பிரதமரை பதவி விலகும்படி அறிவுறுத்தினார். அப்போது தான் நிலைமையை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்தே பிரதமர் ஒலி, தன் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அவருடன் அதிபர் ராம் சந்திர பவுதா மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் பதவியை ராஜினாமா செய்தனர்.
ராணுவ ஆட்சி
பிரதமர் அலுவலகம் மற்றும் அவரது வீட்டையும் கலவர கும்பல் விட்டு வைக்கவில்லை. அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். 'சர்மா ஒலி திருடன், நாட்டை விட்டு வெளியேறு' போன்ற கோஷங்களை எழும்பினர்.
இதனால் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிய சர்மா ஒலி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு தப்பிச் செல்லும் ஏற்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியானது. அரசியல் தலைமை இல்லாத காரணத்தால் தற்போது நாட்டின் ஆட்சி பொறுப்பை ராணுவம் ஏற்றுஉள்ளது.
ராணுவம் சார்பில் வெளியான அறிக்கையில், 'பிரதமர் மற்றும் அதிபர்கள் பதவி விலகி உள்ளனர். இந்த கடினமான சூழ்நிலையில், உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் மேலும் இழப்புகள் ஏற்படாமல் தடுக்க, அனைவரும் கட்டுப்பாட்டுடனும் அமைதியாகவும் இருக்குமாறு கோருகிறோம். சட்டம் ஒழுங்கை மீட்க பேச்சு ஒன்றே வழி' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 239 ஆண்டுகள் பழமையான மன்னர் ஆட்சியை, 2008ல் முடிவுக்கு கொண்டு வந்தனர். அதன் பின் தற்போது வரை நாட்டில் 14 வெவ்வேறு அரசுகள் அமைந்துள்ளன. அவற்றில் எந்தவொரு அரசும் முழுமையான ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்யவில்லை.