ரூ.6,405 கோடி ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரூ.6,405 கோடி ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : ஜூன் 11, 2025 05:18 PM

புதுடில்லி: ரூ.6,405 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை; நாடு முழுவதும் உள்ள முக்கிய மாநிலங்களில் உள்ள இணைப்பு சாலைகளை வலுப்படுத்தவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோடர்மா - பார்ககனா இடையிலான 133 கி.மீ., ரயில் பாதையை, இரட்டை வழித்தடமாக மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் நிலக்கரி அதிகம் உற்பத்தி செய்யப்படும் பகுதி வழியாக, பாட்னா, ராஞ்சியையும் இணைக்கும் ஒரு திட்டமாகும்.
கோடர்மா, சத்ரா, ஹசாரிபாக், ராம்கர் ஆகிய 4 மாவட்டங்கள் இணைக்கப்படுகிறது. அதேபோல, 938 கிராமங்களுக்கான ரயில்சேவை மேம்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 30.4 மில்லியன் டன் சரக்கை கூடுதலாக கையாள முடியும்.
அதேபோல, 185 கி.மீ.,தொலைவுடைய பல்லாரி-சிக்கஜூர் ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றும் திட்டத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம், கர்நாடகத்தின் பல்லாரி மற்றும் சித்திரதுர்கா மாவட்டங்கள் வழியாக ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தை இணைக்கிறது. மங்களூர் துறைமுகத்தை சிக்கந்திராபாத்துடன் இணைக்கும் முக்கிய ரயில் பாதையாகும். இரும்புத் தாது, எக்கு, உரங்கள், தானியங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போன்ற முக்கிய சரக்குகளின் போக்குவரத்துக்கு உதவும். 470 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். ஆண்டுக்கு 18.9 மில்லியன் டன் சரக்குகளை கூடுதலாக கையாளலாம்.
ஜார்கண்ட், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களில் 318 கி.மீ., தொலைவுக்கு இந்தத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 1,408 கிராமங்களில் வாழும் 2.81 கோடி மக்கள் பயனடைவார்கள், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.