உக்ரைனில் இருந்து படைகளை திரும்ப பெறணும்: ரஷ்யாவை வலியுறுத்தி ஐ.நா.,வில் தீர்மானம் நிறைவேற்றம்
உக்ரைனில் இருந்து படைகளை திரும்ப பெறணும்: ரஷ்யாவை வலியுறுத்தி ஐ.நா.,வில் தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : பிப் 25, 2025 07:21 AM

நியூயார்க்: உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி ஐ.நா., பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே, 2014 முதல் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், 2022 பிப்., 24ல் உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா துவங்கியது. போர் மூன்றாண்டுகளாக நீடித்து வருகிறது. மூன்றாம் ஆண்டு நிறைவடைந்த நாளான நேற்று, பல்வேறு உலக தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வில் குவிந்தனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், தங்கள் முயற்சிகளை மறு ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில், 27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்கும் அவசர மாநாட்டை, மார்ச் 6ல் நடத்த உள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா.,வில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதற்றத்தைக் குறைக்கவும், போர் நடவடிக்கைகளை முன்கூட்டியே நிறுத்தவும், உக்ரைனுக்கு எதிரான போரை அமைதியான முறையில் தீர்க்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது.
தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட 18 நாடுகள் எதிராகவும் ஓட்டளித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா உட்பட 63 நாடுகள் இந்த ஒட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

