ஐக்கிய அரபு எமிரேட்சில் யு.பி.ஐ., பரிவர்த்தனை அறிமுகம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் யு.பி.ஐ., பரிவர்த்தனை அறிமுகம்
UPDATED : ஜன 17, 2025 04:38 AM
ADDED : ஜன 17, 2025 04:37 AM

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் இந்திய சுற்றுலா பயணியர், யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் இந்திய சுற்றுலா பயணியர் ஷாப்பிங் செய்யும்போது, ரொக்கமாகவோ அல்லது கடன் அட்டைகள் வாயிலாகவோ மட்டுமே பணம் செலுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. நம் நாட்டில் பயன்படுத்தும், 'பிம், போன் பே, கூகுள் பே' போன்ற யு.பி.ஐ., டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை அங்கு பயன்படுத்த முடியாது.
இதற்கு தீர்வு காணும் வகையில், என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணப்பட்டுவாடா கழகம், என்.ஐ.பி.எல்., எனப்படும், சர்வதேச பணப்பட்டுவாடா நிறுவனம் மற்றும் மேற்காசியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை அளித்து வரும், 'மேக்னடி' நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் இந்தியர்கள் இனி அங்கு யு.பி.ஐ., சேவையை பயன்படுத்த முடியும்.
முதற்கட்டமாக அங்குள்ள, 'டியூட்டி ப்ரீ' கடைகளில் இந்த வசதி அறிமுகமாகிறது. அதை தொடர்ந்து படிப்படியாக சில்லரை வர்த்தக கடைகள், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த சேவை விரிவுப்படுத்தப்பட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, ஆண்டுதோறும் 1.2 கோடி இந்தியர்கள் சுற்றுலா செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பூட்டான், மொரீஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நம் நாட்டின் யு.பி.ஐ., சேவை வாயிலாக பணம் செலுத்தும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது.