ADDED : செப் 15, 2026 07:13 PM
வாஷிங்டன், செப்.16–
விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்கா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த, 1967-ம் ஆண்டு கையெழுத்தான விண்வெளி ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவு ஆயுதங்களை விண்வெளியில் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், செயற்கைக்கோள்களை தாக்கும் ஆயுதங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ரகசியமாக உருவாக்கி வருகின்றன.
இந்நிலையில், விண்வெளியில் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன் கொண்ட ஆயுதங்கள் வைத்திருப்பதை அமெரிக்கா முதன்முறையாக வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளது. எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை முடக்குவது, ராணுவ தகவல்தொடர்புகளை பாதுகாப்பது மற்றும் அமெரிக்க படைகளுக்கு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பரில் நடந்த விமானம், விண்வெளி, சைபர் மாநாட்டில் அமெரிக்க விமானப்படை செயலர் ட்ராய் மீன்க், இதைத் தெரிவித்தார்.
“எதிரிகளிடமிருந்து அமெரிக்கப் படைகளை பாதுகாக்க விண்வெளியில் உள்ள இந்த ஆயுதங்கள் அவசியம்,” என்று அவர் கூறினார். சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எச்சரிக்கையாகவே இதை தெரிவித்த ட்ராய், இந்த ஆயுதங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்ற விபரத்தை வெளியிடவில்லை.
ரஷ்யாவும் சீனாவும் விண்வெளியை போர்க்களமாக பார்த்து, தங்களுடைய ஆயுதத் திறன்களை வளர்த்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், மாறிவரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக விண்வெளி கட்டுப்பாட்டிற்காக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
