41 நாடுகளுக்கு அமெரிக்கா தடை!: விசா வழங்குவதில் கெடுபிடி
41 நாடுகளுக்கு அமெரிக்கா தடை!: விசா வழங்குவதில் கெடுபிடி
ADDED : மார் 16, 2025 02:39 AM

வாஷிங்டன்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி, 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு முழுமையாக அல்லது பகுதியாக தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், பாகிஸ்தான், ரஷ்யா, வட கொரியா, பூடான் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரி 20ல் இரண்டாவது முறையாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப். அவரது முந்தைய ஆட்சியின் போது, குறிப்பிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
உத்தரவு
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க நீதிமன்றமோ, அந்த உத்தரவு செல்லும் என தீர்ப்பு அளித்தது.
டிரம்பிற்குப் பின் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், அந்த தடை உத்தரவை ரத்து செய்தார். ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களை, தனிப்பட்ட முறையில் விசாரித்தே விசா வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக, ஜன., 20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதாவது, அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.
அவ்வாறு வருவோர் குறித்து முறையான ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் பட்டியலை தயாரிக்கும்படி, வெளியுறவுத்துறை உட்பட அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவிட்டார்.
பெரும் தாக்கம்
இதன்படி, 60 நாட்களுக்குள் இதற்கான பட்டியலை தயாரித்து அளிக்கும்படி டிரம்ப் உத்தரவிட்டார். வரும், 21ம் தேதிக்குள் இந்தப் பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை, 41 நாடுகளின் பட்டியலை தயாரித்துள்ளது. அது, சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலுக்கு, வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், பட்டியலில் மாற்றம் ஏற்படலாம் என்றும், அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த, 41 நாடுகள் பட்டியலில் சிவப்பு பிரிவில், ஆப்கானிஸ்தான், பூடான், கியூபா, ஈரான், சிரியா, வட கொரியா, ஏமன் உட்பட 11 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது முழுமையாக நிறுத்தப்படும்.
இரண்டாவதாக, ஆரஞ்ச் பிரிவில், ரஷ்யா, பாகிஸ்தான், மியான்மர் உட்பட, 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நாடுகளுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை; சில விதிவிலக்குகள் வழங்கப்படும். குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறுகிய காலத்துக்கான விசா மட்டுமே வழங்கப்படும். இதனால், சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்களில் பெரும் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறைபாடுகள்
மூன்றாவதாக மஞ்சள் பிரிவில், 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கரீபியன் மற்றும் ஆப்ரிக்க நாடுகள்.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போது, அவர்கள் தொடர்பான தகவல்களை உறுதி செய்வதில் உள்ள குறைபாடுகளை, 60 நாட்களுக்குள் இந்த நாடுகள் தீர்க்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால், முதல் இரண்டு பிரிவுகளுக்கு இந்த நாடுகள் மாற்றப்படும்.