அமெரிக்கா- கனடா உறவு வலுவானது; அவர் எனது நண்பர்; ஜஸ்டின் ட்ரூடோவை புகழ்ந்த பைடன்
அமெரிக்கா- கனடா உறவு வலுவானது; அவர் எனது நண்பர்; ஜஸ்டின் ட்ரூடோவை புகழ்ந்த பைடன்
ADDED : ஜன 08, 2025 07:05 AM

வாஷிங்டன்: 'அமெரிக்கா- கனடா இடையே உறவு வலுவானது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நண்பர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன்' என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
தன் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து, கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். தற்போது தற்காலிக பிரதமராக உள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பைடன் கூறியதாவது: கடைசியாக நான் ஒட்டாவாவுக்குச் சென்ற போது, எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தினேன். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைப் பற்றியும் இதைச் சொல்லலாம்.
அவரால் அமெரிக்கா மற்றும் கனடா இடையே உறவு வலுவாக உள்ளது. இவரால் அமெரிக்க, கனடா மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் அவரால் உலகம் சிறப்பாக உள்ளது. அவரை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் அவரது கூட்டாண்மை மற்றும் தலைமைத்துவத்திற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் இருக்காது; வர்த்தகப் பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும்' என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.