கொரோனா ப்ளூ வைரஸை தடுக்காததால் ரூ.4,000 கோடி தடுப்பூசி திட்டம் ரத்து * அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா ப்ளூ வைரஸை தடுக்காததால் ரூ.4,000 கோடி தடுப்பூசி திட்டம் ரத்து * அமெரிக்கா அறிவிப்பு
ADDED : ஆக 07, 2025 12:14 AM
வாஷிங்டன்,:எம்.ஆர்.என்.ஏ., வகை தடுப்பூசிகள் கொரோனா மற்றும் சளி, காய்ச்சலை ஏற்படுத்தும் ப்ளூ வைரஸ்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்காததால், 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசி திட்டங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவியபோது அமெரிக்க மருந்து நிறுவனங்கள் அதற்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டன. அதில் எம்.ஆர்.என்.ஏ., வகை தடுப்பூசி ஒன்று. 'மெசஞ்சர் ரிபோநியூக்ளிக் ஆசிட்' எனப்படும் எம்.ஆர்.என்.ஏ., ஒரு வகை மரபணு மூலக்கூறு.
இது செல்களுக்குள் மரபணு தகவல்களை மாற்றும் செய்தியாளராக செயல்படுகிறது. எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியில், நோய்க்கு காரணமான வைரஸ் அல்லது பாக்டீரியாவின் மரபணு எம்.ஆர்.என்.ஏ., வடிவில் செலுத்தப்படும்.
அது நோய்க் கிருமியின் குறிப்பிட்ட புரதத்தை உற்பத்தி செய்ய உத்தரவிடும். இந்த புரதம் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் அடையாளம் காணப்பட்டு, நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும். உண்மையான நோய்க் கிருமி தொற்று ஏற்பட்டால், துாண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி பாதுகாப்பு அளிக்கும்.
ஆனால் இது கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூ வைரஸ்களுக்கு எதிராக போதிய பாதுகாப்பை வழங்கவில்லை எனக் கூறி அமெரிக்க சுகாதார துறை அத்தடுப்பூசி திட்டங்களை ரத்து செய்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் கூறியுள்ளதாவது:
கொரோனா மற்றும் ப்ளூ காய்ச்சல் போன்ற சுவாசக் குழாய் தொற்றுகளுக்கு எதிராக இந்த தடுப்பூசிகள் திறம்பட பாதுகாக்கத் தவறிவிட்டன என்பதை தரவுகள் காட்டுகின்றன. எனவே நிபுணர்கள் பரிந்துரைப்படி, 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான 22 எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசி திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த நிதி பயனுள்ள, பாதுகாப்பான பிற தடுப்பூசி திட்டங்களுக்கு மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.