ADDED : ஏப் 15, 2025 05:23 PM

பீஜிங்: அமெரிக்கா உடன் வர்த்தக போர் முற்றி உள்ள நிலையில், அந்நாட்டிடம் இருந்து போயிங் விமானங்களை வாங்க வேண்டாம் என தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்து உள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரியை உயர்த்தி உத்தரவிட்டார். குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குதி செய்யப்படும்
பொருட்களுக்கு, 145 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்த மிரட்டலுக்கு அடிபணியாத சீனா, அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.
அனைத்து நாடுகளின் மீது பிறப்பிக்கப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அமெரிக்கா, சீனா மீதான வரி விதிப்பை மட்டும் அமல்படுத்தியுள்ளது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரிப் போரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்க வேண்டாம் என, தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து விமானம் தொடர்பான சாதனங்கள் மற்றும் கருவிகளை வாங்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டு உள்ளது.