சிரியாவில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்: குண்டுவீச்சில் பயங்கரவாதிகள் 37 பேர் பலி
சிரியாவில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்: குண்டுவீச்சில் பயங்கரவாதிகள் 37 பேர் பலி
UPDATED : செப் 30, 2024 11:55 AM
ADDED : செப் 30, 2024 07:13 AM

வாஷிங்டன்: சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில், பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 37 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களில் பலர், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் எதிராக செயல்படுகின்றனர். அவர்களை ஒழிக்க இரு நாட்டு ராணுவத்தினரும் அவ்வப்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவில் அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஹீராஸ் அல்-தீன் குழுவைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் உட்பட 9 பேரை குறித்து வைத்து வடமேற்கு சிரியாவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேரும் கொல்லப்பட்டனர்.
மத்திய சிரியாவில் ஐ.ஏஸ்., பயிற்சி முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 28 ஐ.ஏஸ்., பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுக்கு எதிராக ஐ.ஏஸ்., அமைப்பு தாக்குதல் நடத்தினால், வான்வழி தாக்குதல் வாயிலாக பதிலடி கொடுப்போம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.