தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்; தண்டனை அறிவிப்பு ஒத்தி வைப்பு: முன்னாள் அதிபர் டிரம்ப் நிம்மதி!
தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்; தண்டனை அறிவிப்பு ஒத்தி வைப்பு: முன்னாள் அதிபர் டிரம்ப் நிம்மதி!
UPDATED : செப் 07, 2024 07:11 AM
ADDED : செப் 07, 2024 06:44 AM

வாஷிங்டன்: அதிபர் தேர்தல் முடியும் வரை டொனால்டு டிரம்புக்கு தண்டனை விதிப்பதை ஒத்தி வைக்க அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப், 2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தார். அப்போதைய அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக தொடர்ந்து பேட்டிகள் அளித்தார். இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், பேட்டி தராமல் இருப்பதற்காக, பணம் கொடுத்து ஸ்டார்மி வாயை அடைத்தார். இவ்வாறு தரப்பட்ட பணத்துக்கு பொய்க்கணக்கும் எழுதியுள்ளார்.
குற்றவாளி
இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, முன்னாள் அதிபர் டிரம்ப் நேரில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டார்மி, ஹோட்டல் ஒன்றில் தனிமையில் சந்தித்தது தொடர்பான பல தகவல்களை வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில், டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாக, வரும் செப்டம்பர் 18ம் தேதி டிரம்புக்கு தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
நிறுத்தி வைப்பு
இது வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என டிரம்ப் இடம் நிபுணர்கள் தெரிவித்தனர். அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப், நீதிபதி ஜுவான் மெர்ச்சனை சந்தித்து நவம்பர் 5ம் தேதி தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, அதிபர் தேர்தல் முடியும் வரை, டொனால்டு டிரம்ப் மீதான தண்டனை அறிவிப்பதை ஒத்தி வைக்க உத்தரவிட்டார்.