ADDED : டிச 25, 2025 01:08 AM

வாஷிங்டன்: கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 4.30 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவே கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டின் அதிகபட்ச வளர்ச்சியாகும். முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வளர்ச்சி 3.80 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி 8.20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் 70 சதவீத பங்கு வகிக்கும் நுகர்வோர் செலவுகள் 3.50 சதவீதம் அதிகரித்து உள்ளன. அரசின் நுகர்வு மற்றும் முதலீடு 2.20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது முந்தைய ஜூன் காலாண்டில் 0.10 சதவீதம் சரிந்திருந்தது. ராணுவ தளவாட செலவுகள் மற்றும் மாகாணங்கள், உள்ளூர் அரசு அமைப்புகளின் செலவுகள் அதிகரித்ததே அரசின் நுகர்வு அதிகரிக்க முக்கிய காரணங்களாக அமைந்து உள்ளன.
அதே நேரத்தில், தனியார் துறை முதலீடு 0.30 சதவீதம் சரிந்துள்ளது. பணவீக்கம், ஜூன் காலாண்டின் 2.10 சதவீதத்திலிருந்து, செப்டம்பர் காலாண்டில் 2.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

