போர்டோரிகாவில் 20 ஆண்டுக்கு முன் மூடப்பட்ட கடற்படை தளத்தில் அமெரிக்க படைகள் குவிப்பு
போர்டோரிகாவில் 20 ஆண்டுக்கு முன் மூடப்பட்ட கடற்படை தளத்தில் அமெரிக்க படைகள் குவிப்பு
ADDED : நவ 15, 2025 11:01 PM
* வெனிசுலாவுக்கு குறி போர்டோ ரிகாவில் 20 ஆண்டுகளுக்கு முன் மூடிய கடற்படை தளத்தில் அமெரிக்க படைகள் குவிப்பு
வாஷிங்டன்: கரீபியன் கடலில் உள்ள போர்டோ ரிகா தீவில், 20 ஆண்டுகளுக்கு முன் மூடிய தன் கடற்படை தளத்தை அமெரிக்கா மீண்டும் திறந்துள்ளதுடன், படைகளையும் குவித்து வருகிறது.
வடகிழக்கு கரீபியன் கடலில், டொமினிகன் குடியரசு நாட்டுக்கு கிழக்கிலும், அமெரிக்க விர்ஜின் தீவுகளுக்கு மேற்கிலும் அமைந்துள்ள போர்டோ ரிகா தீவுகள், அமெரிக்காவுக்கு சொந்தமானது. இது பிரதான தீவு மற்றும் பல சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவு கூட்டமாகும். இந்த போர்டோ ரிகா தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சீபா நகரில், அமெரிக்காவுக்கு சொந்தமான கடற்படை மையம் ஒன்று இயங்கி வந்தது.
இரண்டாம் உலகப்போரின் போது, கிழக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பகுதியில், அமெரிக்காவின் கடல்சார் பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய மையமாக செயல்பட இது உருவாக்கப்பட்டது. இம்மையம் கடற்படை மற்றும் கடல்சார் பயிற்சிக்கான மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக இருந்தது.
கடந்த 1999ல் இங்குள்ள வியேக்ஸ் தீவில் அமெரிக்க கடற்படை நடத்திய பயிற்சிக்கு எதிராக, பெரியளவில் மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, கடந்த 2004 மார்ச்சில் இக்கடற்படை தளம் மூடப்பட்டது. மூடப்பட்ட பின், அதன் ஓடுபாதை, தற்போது 'ஜோஸ் அபோன்டே டெ லா டோரெ' விமான நிலையம் என பெயரிடப்பட்டு பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது இத்தளத்திற்கு அமெரிக்காவின் எப் - 35 ரக போர் விமானங்கள், கனரக ஹெலிகாப்டர்கள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து இறங்கியுள்ளன. மேலும், உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பலான 'யு.எஸ்.எஸ்., ஜெரால்டு ஆர் போர்டு' ஒரு குழுவுடன் கரீபியன் கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றவாளிகளை எதிர்த்து போராடுவதற்காக இப்படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த படை குவிப்பை, ஏகாதிபத்திய அச்சுறுத்தல் என, தென் அமெரிக்க நாடான வெனிசுலா கண்டித்துள்ளது. தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஆயுத போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மேலும், தன் படைகளையும் வெனிசுலா தயார் நிலையில் வைத்துள்ளது.
போர்டோ ரிகாவில், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கடற்படை தளத்தை திறந்து, இவ்வளவு பெரிய படைகளை அமெரிக்கா குவித்திருப்பது, அப்பகுதியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

