தென்கிழக்கு ஆசியாவை சுனாமியாக தாக்குகிறது அமெரிக்காவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவு
தென்கிழக்கு ஆசியாவை சுனாமியாக தாக்குகிறது அமெரிக்காவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவு
ADDED : அக் 25, 2025 11:50 PM
ஹானோய்: ஒரு மறைமுக சுனாமி போல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், அமெரிக்காவில் இருந்து அதிகளவில் மின்னணு கழிவுகள் கட்டுப்பாடு இல்லாமல் கொட்டப்படுவதாக, உலக சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
நச்சு உலோகங்கள் அமெரிக்காவில் உள்ள சியாட்டிலை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பான்' எனப்படும் 'பேசன் ஆக் ஷன் நெட்வொர்க்' என்ற உலக சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்காவைச் சேர்ந்த 10 நிறுவனங்கள், பயன்படுத்திய மின்னணுக் கழிவுகளை ஆசியாவுக்கு, குறிப்பாக மேற்காசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து, இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பழுதடைந்த அல்லது பழைய பயன்பாட்டில் இல்லாத மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் ஈயம், காட்மியம் மற்றும் பாதரசம் போன்றவற்றை உள்ளடக்கிய நச்சு உலோகங்கள் 'இ - வேஸ்ட்' எனப்படும் மின்னணு கழிவுகளாக கருதப்படுகின்றன.
மின்னணு சாதனங்களை அடிக்கடி மாற்றுவதால், மறு சுழற்சி செய்யப்படும் மின்னணு சாதனங்களை விட ஐந்து மடங்கு மின்னணு கழிவுகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவின் பொது மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பயன் படுத்தப்பட்ட மின்னணு கழிவுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு மறைமுக சுனாமி போல், இந்த நாடுகளில் மின்னணு கழிவுகள் கொட்டப்படுகின்றன.
அமெரிக்காவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 33,000 டன் அளவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பான 'யுனிடார்' தெரிவித்துள்ளது.
இந்த சாதனங்களை அமெரிக்க நிறுவனங்கள் மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
கடந்த, 2023 ஜனவரி முதல் இந்தாண்டு பிப்., வரை, 10 நிறுவனங்களும், 8,782 கோடி ரூபாய்க்கும் அதிகமான மின்னணு கழிவுகளை ஏற்றுமதி செய்துள்ளன.
கடந்த, 2017ல் சீனா வெளிநாட்டுக் கழிவுகளை இறக்குமதி செய்வதை தடை செய்தது. இதன் பின் பல சீன மின்னணு வணிக நிறுவனங்கள் தங்கள் மின்னணுக் கழிவுகளை அனுப்பும் இடமாக தென்கிழக்கு ஆசியாவை மாற்றின.
சுற்றுச்சூழல் பாதிப்பு இதனால், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மின்னணுக் கழிவுகள் கொட்டப்படும் பகுதியாக மாறி வருகின்றன. ஏற்கனவே உலகில் உற்பத்தியாகும் மின்னணுக் கழிவுகளில், 50 சதவீதம் ஆசியாவில் உற்பத்தியாகிறது.
தற்போது அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இருந்து மின்னணுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. குறுகிய பண நோக்கத்துக்காக, இந்த நாடு களைச் சேர்ந்தவர்கள், இந்தக் கழிவுகளை வாங்குகின்றனர்.
அந்தக் கழிவுகளில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. மாறாக குப்பைப் போல் மலையாக குவிக்கப்படுகின்றன. இது சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தாய்லாந்து, மலேஷியா போன்ற நாடுகள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணுக் கழிவுகளை தடை செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

