அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: ஆளும், எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் புகார்
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: ஆளும், எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் புகார்
ADDED : அக் 03, 2025 04:30 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில், அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேறாததால் அரசு நிர்வாகம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
பணி முடக்கம் அமெரிக்காவில் அரசு நிர்வாகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க, அந்நாட்டு பார்லிமென்டால் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டும்.
பார்லிமென்டின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறாவிட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது.
இதனால், அத்தியாவசியமற்ற சேவைகள் மற்றும் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படும். இது பணி முடக்கம் என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா பார்லிமென்டில் நிறைவேறவில்லை. இதையடுத்து, அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
இதனால், ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர்.
இதைத் தவிர, அரசு சேவைகள் பலவும் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த, 2018ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்க அரசு பணிகள் மீண்டும் முடங்கியுள்ளன.
பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மட்டுமின்றி, ஆளும் குடியரசுக் கட்சியினர் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தனர்.
இதையடுத்து, 47:-53 என்ற விகிதத்தில் மசோதா தோல்வியடைந்தது.
அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததால், நிர்வாக முடக்கம் அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று, முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ஆளும் குடியரசு கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும், ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி உள்ளனர்.
நிதி பற்றாக்குறை இது குறித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், “சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கும் சுகாதார பாதுகாப்பை நீட்டிக்க ஜனநாயகக் கட்சியினர் முயற்சித்ததன் விளைவாக, நிதி பற்றாக்குறை ஏற்பட்டு அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது,” என விளக்கம் அளித்தார்.
இது குறித்து, செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் ஷுமர் கூறுகையில், “அதிபர் டொனால்டு டிரம்ப் நல்லெண்ணத்துடன் செயல்படவில்லை.
''அமெரிக்க மக்களை பிணைக் கைதிகளாக பயன்படுத்தி, நாட்டிற்கு வலியை தருகிறார்,” என, குறிப்பிட்டார்.