அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா - ஈரான் மறைமுக பேச்சு
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா - ஈரான் மறைமுக பேச்சு
ADDED : பிப் 07, 2026 07:05 AM
மஸ்கட் : அமெரிக்கா - ஈரான் இடையேயான அணுசக்தி திட்டம் தொடர்பாக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அந்நாட்டு அரசுடன் இரு நாட்டு பிரதிநிதிகளும் நேற்று மறைமுக பேச்சு நடத்தினர்.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்த 2015-ல் அமெரிக்கா அந்நாட்டை அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வைத்தது.
அதன்பின் 2018-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இதையடுத்து, ஈரான் யுரேனியத்தை அணு ஆயுத தயாரிப்புக்கு ஏற்ற தரத்தில் செறிவூட்டுவதாக இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின.
கடந்த ஆண்டு ஜூனில் இந்த குற்றச்சாட்டை கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே அமெரிக்க விமானப் படையும் களமிறங்கி ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குண்டுவீசியது. இதனால் பாதிக்கப்பட்ட அணுசக்தி தொடர்பான பேச்சுகள் மீண்டும்
துவங்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் மறைமுக பேச்சுக்கு மேற்கு ஆசிய நாடான ஓமன் நடுவராக செயல்படுகிறது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று நடந்த பேச்சில் இரு நாட்டு குழுவும், தனித்தனியாக ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்தர் அல் புசைதியை சந்தித்தனர்.
இரு தரப்பும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்ததால், ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்தர் துாதுவராக செயல்பட்டார்.
இதில், யுரேனியம் செறிவூட்டல் அளவை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அணுசக்தி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஈரான் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா தளர்த்த வேண்டுமென ஈரான் வலியுறுத்தியது.
அமெரிக்கா சார்பில் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் அதிபர் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் பங்கேற்றனர். ஈரான் தரப்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பங்கேற்றார்.

