அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் வந்தது 2வது விமானம்; 116 இந்தியர்கள் வருகை
அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் வந்தது 2வது விமானம்; 116 இந்தியர்கள் வருகை
ADDED : பிப் 16, 2025 06:38 AM

சண்டிகர்: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 116 பேரை ஏற்றிக் கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் வெளியேற்றப்படுகின்றனர். கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி, 104 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் 2வது கட்டமாக நேற்றிரவு 11.35 மணியளவில் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
அவர்களில் 67 பேர் பஞ்சாப், 33 பேர் ஹரியானா, எட்டு பேர் குஜராத், மூன்று பேர் உத்தர பிரதேசம், தலா இருவர் கோவா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தலா ஒருவர் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆவணம் சரிபார்ப்பு உள்ளிட்டவைக்கு பிறகு தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இன்று 3வது அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் வந்தடைய உள்ளது. இந்த விமானத்தில் 157 இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.
வாரத்துக்கு இரண்டு விமானங்கள் வாயிலாக, இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் குறைந்தபட்சம் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக, வாஷிங்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பியூ' என்ற ஆய்வு அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.