இஸ்ரேலுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: சொல்கிறார் அமெரிக்க ராணுவ தளபதி
இஸ்ரேலுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: சொல்கிறார் அமெரிக்க ராணுவ தளபதி
UPDATED : ஆக 02, 2026 06:22 PM
ADDED : ஆக 02, 2026 04:31 PM

வாஷிங்டன்: 'இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து முறியடிக்க, மேற்காசிய பிராந்தியத்தில் போதுமான போர்க்கப்பல்கள் எங்களிடம் இல்லை' என, அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் தெரிவித்துள்ளார்.
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை அந்நாட்டின் ஐரோப்பிய கட்டளை பிரிவு ஒருங்கிணைக்கிறது. இந்த பிரிவின் தளபதியாக ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் உள்ளார். இப்பிரிவின் போர்க்கப்பல்கள், ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் எழுதிய கடிதத்தில், 'மேற்காசிய பிராந்தியத்திற்கு கூடுதலாக ஒரு போர்க்கப்பலை என் கட்டுப்பாட்டில் அனுப்பாவிட்டால், அடுத்த முறை ஏவுகணை தாக்குதல் நடந்தால் தடுப்பது சிரமம். அப்போது, அமெரிக்க வளங்களை பாதுகாப்பதா அல்லது இஸ்ரேலுக்கா முன்னுரிமை வழங்குவதா என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த தகவலை, 'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
தற்போது, அமெரிக்காவின் ஐந்து போர்க்கப்பல்கள் ஸ்பெயினில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை தேவைப்படும் நேரத்தில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆறாவது போர்க்கப்பலும் அந்தப் படையில் இணைய உள்ளது.
