நீர்மூழ்கி கப்பலில் போதைப்பொருள்; தாக்கி அழித்த அமெரிக்க கடற்படை
நீர்மூழ்கி கப்பலில் போதைப்பொருள்; தாக்கி அழித்த அமெரிக்க கடற்படை
ADDED : அக் 20, 2025 02:57 AM

வாஷிங்டன்: போதைப்பொருட்களுடன் அமெரிக்க கடல் எல்லை நோக்கி வந்த நீர்மூழ்கி கப்பலை நேற்று முன்தினம் அந்நாட்டு கடற்படை தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தென் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. கடல் மற்றும் சரக்கு லாரிகள் வழியாக பெரும்பாலான போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்குள் நுழைகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பரவலாக பயன்படுத்தும் கரீபியக் கடல் பாதையில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை அப்பகுதியில் போதைப்பொருட்களுடன் வந்ததாக ஆறு கப்பல்களை அமெரிக்க கடற்படை தாக்கியுள்ளது. அவற்றில் சில வெனிசுலாவிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.
டிரம்ப் பொறுப்பேற்ற கடந்த 10 மாதங்களில் இதுவரை, 27 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கரீபியன் கடல் வழியாக போதைப்பொருட்களுடன் நீர்மூழ்கி கப்பல் வருவதாக அமெரிக்க உளவுத்துறை கடற்படையை உஷார்படுத்தியது. அப்பகுதியில் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்தனர்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்காவை நோக்கி வந்த மிகப் பெரிய போதைப்பொருள் நீர்மூழ்கிக் கப்பலை அழித்துள்ளோம். இந்த நீர்மூழ்கிக் கப்பல் கரைக்கு வந்திருந்தால் குறைந்தது 25,000 அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பர்.
கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களின் நாடுகளான ஈக்வடார் மற்றும் கொலம்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலம், கடல் என எந்த வழியில் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தினாலும் அவர்களை சும்மா விடமாட்டேன் இவ்வாறு அவர் கூறினார்.