'ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறோமா' எனக்கு தெரியாது என்கிறார் அமெரிக்க அதிபர்
'ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறோமா' எனக்கு தெரியாது என்கிறார் அமெரிக்க அதிபர்
UPDATED : ஆக 07, 2025 11:18 AM
ADDED : ஆக 07, 2025 12:10 AM

வாஷிங்டன்:ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம் மற்றும் உரங்களை இறக்குமதி செய்வதாக இந்தியா குற்றஞ்சாட்டியது பற்றி அதிபர் டொனால்டு டிரம்பிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பிய போது, 'எனக்கு தெரியாது, விசாரிக்கிறேன்' என மழுப்பலாக பதிலளித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு கொள்கையின் அடிப்படையில் சர்வதேச நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்து வருகிறார்.
அமெரிக்காவுக்கு எத்தனை ஆயிரம் கோடி டாலர்கள் அளவில் இறக்குமதி நடக்கிறதோ, அதற்கு இணையாக அமெரிக்க பொருட்களின் ஏற்றுமதி இருக்க வேண்டும் என்பதே டிரம்பின் திட்டம். இதன் மூலம் வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறார்.
அதற்காக முரட்டுத்தனமான வரி விதிப்பு முறையை கையில் எடுத்துள்ளார். இதில், இந்தியாவுக்கு வர்த்தக பற்றாக்குறையுடன் சேர்த்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் காரணமாக கூறி சமீபத்தில் 25 சதவீத வரி விதித்தார். இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் கிடைக்கும் பணத்தை வைத்து ரஷ்யா உக்ரைனுடன் தொடர்ந்து போரில் ஈடுபடுகிறது என்பது டிரம்பின் குற்றச்சாட்டு.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், வரியை மேலும் கடுமையாக உயர்த்தப் போவதாகவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துளார்.
இதற்கிடையே அமெரிக்காவின் இரட்டை வேடத்தை நம் வெளியுறவு அமைச்சகம் வெளிச்சம் போட்டு காட்டியது. ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா தன் அணுசக்தி தொழிலுக்கு யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு, மின்சார வாகனத் தொழிலுக்கு தேவையான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது என, அதில் கூறப்பட்டது.
புள்ளிவிவரங்களின் படி, 2024ல் மட்டும் அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்துள்ளது. அதில் 10,500 கோடி ரூபாய்க்கு உரங்கள், 5,200 கோடி ரூபாய்க்கு யுரேனியம் இறக்குமதி செய்துள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், 'ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம், உரங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதாக இந்தியா குற்றஞ்சாட்டுகிறதே' என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அதிபர் டிரம்ப், தடுமாறினார். பின், அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது; விசாரிக்கிறேன், என முடித்துக்கொண்டார்.
இது கடும் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. 'வானத்தின் கீழ் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் தன்னால் தான் என கூறிக்கொள்ளும் அதிபர் டிரம்புக்கு, தன் நாட்டில் நடப்பவையே தெரியவில்லையே' என பலரும் தாக்கியுள்ளனர்.
உறவை கெடுத்துக் கொள்ளாதீர்
ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது. எதிரி சீனாவுக்கான வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தியுள்ளோம். இது தவறு. சீனாவுக்கு சலுகை காட்டக் கூடாது. அதே போல் நம் வலுவான நட்பு நாடான இந்தியாவுடனான உறவை கெடுத்துக்கொள்ள கூடாது. நிக்கி ஹாலே ஐ.நா.,வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர்