பாக்.,- அரபு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை: காசா போர் நிறுத்தம் குறித்து முக்கிய பேச்சு
பாக்.,- அரபு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை: காசா போர் நிறுத்தம் குறித்து முக்கிய பேச்சு
ADDED : செப் 25, 2025 01:10 AM

நியூயார்க்: காசா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் சில அரபு நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பல நாடுகள் பேச்சு நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளை குறி வைத்து, அண்டை நாடான கத்தாரில் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இது தொடர்பாக, கத்தாரின் முயற்சியால், முஸ்லிம் நாடுகள் அமைப்பு மற்றும் அரபு லீக் எனப்படும் வளைகுடா பகுதியில் உள்ள நாடுகள் சமீபத்தில் சந்தித்து பேசின.
இஸ்ரேலுக்கு எதிராக, இந்த அமைப்புகளில் உள்ள முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், முஸ்லிம் நாடுகளுக்கு என தனியாக ராணுவ ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா.,வின் 80வது பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.
இந்த கூட்டத்துக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவருடைய தலைமையில், முஸ்லிம் நாடுகள் மற்றும் அரபு லீக் அமைப்பில் உள்ள சில நாடுகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில், துருக்கி, கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, காசாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது மிக முக்கியமான சந்திப்பு என்றும், காசாவில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதே இதன் நோக்கம் என்றும் டிரம்ப் கூறினார்.
முன்னதாக, ஐ.நா., பொது சபையில் உரையாற்றிய டிரம்ப், போர் நிறுத்த ஒப்பந்த உடன்பாட்டை நிராகரித்ததற்காக ஹமாஸ் பயங்கரவாதிகளை குற்றம் சாட்டினார். மேலும் சமீபத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நாடுகளையும் அவர் விமர்சித்தார்.