அவரிடம் பணிபுரிய ஆர்வம் இருக்குதாம்; எலான் பதவிக்கு வந்தால் ஏழரை நிச்சயம்!
அவரிடம் பணிபுரிய ஆர்வம் இருக்குதாம்; எலான் பதவிக்கு வந்தால் ஏழரை நிச்சயம்!
UPDATED : செப் 04, 2024 10:36 AM
ADDED : செப் 04, 2024 07:15 AM

வாஷிங்டன்: டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனரும், எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார். டிரம்பை ஆதரிப்பதாக, உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்து பிரசாரமும் செய்து வருகிறார்.
ரூ.375.80 கோடி
இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், சமூக வலைதளமான எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளர். டிரம்பிற்கு, 4.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பு படி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதி கொடுப்பதாகவும் மஸ்க் அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி, தன் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸ் மூலம் டிரம்ப்பை நேர்காணலும் செய்தார். இதை பல லட்சம் நேரடியாக கேட்டனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் சென்றடைய மிகப்பெரிய வாய்ப்பை மஸ்க் ஏற்படுத்தியதாக டிரம்ப் கருதுகிறார். அப்போதே, 'நான் ஜெயித்தால் எலான் மஸ்க் அமைச்சர்' என்று டிரம்ப் அறிவித்து விட்டார்.
அமெரிக்க அரசு துறைகளின் செலவினங்களைக் குறைக்க தனியார் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைக்க டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மஸ்க் ஆர்வம்!
இதில் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், பெட் எக்ஸ் முன்னாள் சி.இ.ஓ., பிர்ட் ஸ்மித், ஹோம் டிபோட் முன்னாள் சிஇஓ ராபர்ட் நாடெல்லி உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது.
இதற்கு பதில் அளித்து சமூகவலைதளத்தில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில்,'பல்வேறு அரசு துறைகளில் தேவையற்ற செயல்பாடுகள் நிறைய உள்ளன. அவை களையப்பட வேண்டும். இதில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் டிரம்ப் உடன் மஸ்க் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
இருவருமே 'ஏழரை'
டிரம்ப், மஸ்க் இருவருமே, யாராலும் கணிக்க முடியாதவர்கள்; தான் தோன்றித்தனமாக செயல்படுபவர்கள் என்பது தான் பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்தாக உள்ளது. வெளிநாட்டினர் வருகை, அவர்களால் ஏற்படும் நிதிச்சுமை, சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து இருவருமே ஒத்து கருத்து கொண்டவர்கள். இருவரும் பதவிக்கு வந்தால், வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றவர்களுக்கு நிச்சயம் பிரச்னை வரும் என்ற கருத்து உள்ளது. இவர்களது கூட்டணியை, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் 'ஏழரை'யாக கருதுவது குறிப்பிடத்தக்கது.