அமெரிக்க அதிபர் தேர்தல்: பெரும்பான்மையை கடந்து டிரம்ப் கட்சி வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தல்: பெரும்பான்மையை கடந்து டிரம்ப் கட்சி வெற்றி
UPDATED : நவ 06, 2024 06:09 PM
ADDED : நவ 06, 2024 06:00 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், டொனால்டு டிரம்ப்பின் குடியரசு கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை கடந்து 277 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 226 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு துவங்கியது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78), ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்(60), போட்டியிடுகின்றனர்.
தேவை 270
ஓட்டு எண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், இன்டியானா, கென்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 270 தொகுதிகளில் வெற்றி தேவை. தற்போதைய நிலவரப்படி,
டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை கடந்தார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், வெர்மான்ட், மாசசூசெட்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட் உள்ளிட்ட மாகாணங்களி்ல், 226 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பின்தங்கி உள்ளார். தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.
அதிபர் தேர்தலுடன் அமெரிக்க செனட் சபைக்கான தேர்தலும் நடந்தது. இதில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன. தேர்தலில், டிரம்பின் குடியரசு கட்சி வேட்பாளர்கள், பெரும்பான்மைக்கு தேவையான 51 இடங்களில் வெற்றி பெற்று விட்டனர். கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சியினர் 43 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.
அதேபோல், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் டிரம்பின் குடியரசு கட்சி 186 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது, கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 160 இடங்களில் வென்றுள்ளது. பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை.