பத்திரிகைக்கு எதிராக வழக்கு அமெரிக்க அதிபர் மனு தள்ளுபடி
பத்திரிகைக்கு எதிராக வழக்கு அமெரிக்க அதிபர் மனு தள்ளுபடி
ADDED : செப் 21, 2025 12:29 AM
நியூயார்க்,:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டின் முன்னணி பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்'க்கு எதிராக 1.3 லட்சம் கோடி ரூபாய் இழப் பீடு கேட்டு தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், 10 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை பற்றி பொய்யாகவும், அவதுாறு ஏற்படுத்தும் நோக்கிலும் செய்திகளை பரப்பி வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இடதுசாரி ஜனநாயக கட்சியின் ஊதுகுழலாக நியூயார்க் டைம்ஸ் உருமாறியிருப்பதாக விமர்சித்த அவர், 1.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதி ஸ்டீவன் மெர்ரிடே முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு வழக்கை, அவமதிப்பு செய்வதற்கான இடமாகவோ அல்லது எதிரிகளுக்கு எதிராகப் பேசுவதற்கான ஒரு தளமாகவோ பயன்படுத்த முடியாது.
ஒரு சட்டப்பூர்வ புகார் என்பது நியாயமாகவும், துல்லியமாகவும் இருக்கவேண்டும். மனுதாரர் நீதிமன்றத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு ஏன் தகுதியானவர் என்பதை தெளிவான அறிக்கையில் விளக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வழக்கை தாக்கல் செய்ய டிரம்ப்பிற்கு நீதிபதி 28 நாட்கள் அவகாசமும் வழங்கினார்.