ADDED : ஜன 07, 2026 09:27 PM

மாஸ்கோ : போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி ஆயில் டேங்கரை பாதுகாக்கும் ரஷ்யாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த ஆயில் டேங்கரை அமெரிக் கடற்படை சிறைபிடித்து வைத்துள்ளது.
'பெல்லா 1' என்ற எண்ணெய் டேங்கர், தென் அமெரிக்க நாடான வெனிசுலா கடற்பகுதியில் இருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் தடைகளை மீறி எண்ணெய் கொண்டு சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த மாதம் அமெரிக்க கடற்படை இந்தக் கப்பலை பறிமுதல் செய்ய முயன்ற போது, அது தப்பியோடியது. அதன்பின், அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ரஷ்யாவின் வடக்கு பகுதியான முர்மான்ஸ்க் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அமெரிக்க கடற் பாதுகாப்பு படையினர் இந்த கப்பலை தொடர்ந்து துரத்தி வந்தனர். இதனால், ரஷ்யா தன் கொடியை ஏற்றி, தங்கள் நாட்டு பாதுகாப்பிற்குட்பட்ட 'மரினெரா' எனப் பெயர் மாற்றம் செய்தது. மேலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உட்பட பல போர்க் கப்பல்களை அனுப்பி, இந்த எண்ணெய் டேங்கருக்கு பாதுகாப்பு அளித்து வந்தது.
இருப்பினும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த டேங்கரை அமெரிக்க கடற்படை சிறைபிடித்துள்ளது. இதனை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. அமெரிக்க கடலோர காவல்படைமற்றும் அமெரிக்க ராணுவத்தால் கூட்டாக நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ரஷ்யா உடனான பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

