பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு; இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம்
பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு; இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம்
ADDED : அக் 31, 2025 12:25 PM

 புதுடில்லி: அடுத்த 10 ஆண்டுக்கு பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே வரிவிதிப்பு விவகாரத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் மாநாடு கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் சந்தித்துப் பேசினர். முடிவில், 10 ஆண்டுக்கான ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் வெளியிட்டுள்ள அறிக்கை; இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினேன். அப்போது, 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத்தானது.
இது, பிராந்திய நிலைப்பாடு மற்றும் போர் தடுப்பு விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு கூட்டுறவை மேலும் மேம்படுத்துகிறது. நமது ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறோம். இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னெப்போதும் இருந்ததை விட வலிமையாக உள்ளன.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

