21 நாளில் பதிலளிக்க அதானிக்கு அமெரிக்க பங்குச்சந்தை நோட்டீஸ்
21 நாளில் பதிலளிக்க அதானிக்கு அமெரிக்க பங்குச்சந்தை நோட்டீஸ்
ADDED : நவ 23, 2024 11:58 PM

புதுடில்லி: பங்குச் சந்தை விதிகளை மீறியதாக கூறப்படும் புகார்கள் தொடர்பாக, தங்களுடைய நிலைப்பாட்டை, 21 நாட்களில் தெரிவிக்கும்படி, தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோருக்கு, அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன் சார்பில் நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனக்கு சாதகமான ஒப்பந்தங்கள் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது, அமெரிக்க நீதித் துறை, அந்த நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை மறைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக, எஸ்.இ.சி., எனப்படும் அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது.
இவற்றின் அடிப்படையில், கவுதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. இந்நிலையில், அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன், அதானி உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்த நோட்டீஸ் குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள கவுதம் அதானியின் வீட்டிலும், அவருடைய உறவினரும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் செயல் இயக்குனருமான சாகர் அதானியின் வீட்டிலும், நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது.
நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள, நவ., 21ம் தேதியிட்ட அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களுடைய நிலைப்பாட்டை, இந்த நோட்டீஸ் பெற்ற 21 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும். அல்லது நீதிமன்ற விதிகளின்படி, எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு நீங்கள் பதில் அளிக்காவிட்டால், வழக்கின் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.