பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் கடைசி முயற்சியையும் சுக்குநூறாக்கியது அமெரிக்கா கோர்ட்!
பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் கடைசி முயற்சியையும் சுக்குநூறாக்கியது அமெரிக்கா கோர்ட்!
ADDED : மார் 07, 2025 09:32 AM

வாஷிங்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தலை நிறுத்த கோரி பயங்கரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த அவசர மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா. நம் அண்டை நாடான பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய இவன், தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.
இவனை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரியில் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து, எந்த நேரத்திலும் அவன் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தன் கடைசி வாய்ப்பாக, இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு உடனடியாக தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான். 'இந்தியாவில் தன்னை சித்ரவதை செய்வர் என்பதால், நாடு கடத்தக்கூடாது' என, மனுவில் அவன் கூறியிருந்தான்.
தஹாவூர் ராணா, தன் கடைசி வாய்ப்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் தஹாவூர் ராணாவின் கடைசி முயற்சியையும் நீதிமன்றம் சுக்குநூறாக்கியது. விரைவில் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவான் என்பது உறுதியாகி உள்ளது.