செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல்: 21 ஏவுகணைகளை வீழ்த்தியது அமெரிக்கா
செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல்: 21 ஏவுகணைகளை வீழ்த்தியது அமெரிக்கா
ADDED : ஜன 10, 2024 01:13 PM

வாஷிங்டன்: செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து, ஹவுதி அமைப்பினர் தாக்கிய 21 ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி படை செயல்படுகிறது.
இவர்கள், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால், செங்கடல் வழியாக இஸ்ரேல் சென்று வரும் சரக்கு கப்பல்களை அழிப்போம் என அறிவித்தனர். அதன்படி கடந்த நவம்பர் மாதம் முதல் பல சரக்கு கப்பல்களை, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக தாக்கி வருகின்றனர்.
இதனால் அமெரிக்கா, செங்கடல் வர்த்தக வழியை பாதுகாக்க பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளுடன் இணைந்து ஹவுதி எதிர்ப்பு படையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.
இவற்றில் 18 ஒரு வழி ட்ரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.
ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

