பாலஸ்தீனியர்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல்; அமெரிக்கா எச்சரிக்கை
பாலஸ்தீனியர்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல்; அமெரிக்கா எச்சரிக்கை
ADDED : அக் 19, 2025 08:21 AM

வாஷிங்டன்; பாலஸ்தீன மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பகமாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது,
காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் மொழிந்த அமைதி திட்டத்தின் படி தற்போது அங்கு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும், ஹமாஸ் மற்றும் அவர்களை எதிர்க்கும் சில குழுக்கள் இடையே மோதல் எழுந்து வருகிறது.
காசா மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் உள்ளே சென்று ஹமாஸ் அமைப்பினரை கொல்வதை தவிர வேறு வழி இல்லை என்று டிரம்பும் அண்மையில் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இந் நிலையில், பாலஸ்தீன மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பகமாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
இதுபோன்ற தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறுவதாகும். உடனடியாக போர் நிறுத்த மீறலை ஹமாஸ் மேற்கொள்ளும் என்று நம்பகமான தகவல்கள் காசா அமைதி ஒப்பந்த உத்தரவாத நாடுகளுக்கு கிடைக்க பெற்றுள்ளன.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும். தாக்குதலை ஹமாஸ் தொடர்ந்தால் அங்குள்ள காசா மக்களை பாதுகாக்கவும், போர்நிறுத்த ஒருமைப்பாட்டை காக்கவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காசா மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமைதியை பேணவும் அமெரிக்காவும், அதற்கு ஆதரவளிக்கும் நாடுகளும் தங்களது உறுதிப்பாட்டில் ஸ்திரமாக உள்ளனர்.
இவ்வாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.