சீனா மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதிக்கும்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
சீனா மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதிக்கும்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
UPDATED : ஆக 26, 2025 10:01 PM
ADDED : ஆக 26, 2025 10:00 PM

வாஷிங்டன்: காந்த ஏற்றுமதிகள் கட்டுப்படுத்தப் பட்டால், சீனா மீது 200% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப், வர்த்தக விவகாரத்தில் தடாலடியாக முடிவுகளை எடுத்து வருகிறார். அவர் பரஸ்பர வரி என்ற பெயரில் இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளுக்கு அதிக வரி விதித்தார். அப்போது சீனா பதிலுக்கு வரி விதித்தது. பின்னர் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் முற்றியது.
ஒரு கட்டத்தில் சீனாவுக்கு 145 சதவீதம் வரி போட்டது அமெரிக்கா. பதிலுக்கு சீனா 135 சதவீதம் வரி விதித்தது. இரு நாடுகள் இடையே வர்த்தகம் ஸ்தம்பித்து போனது. ஸ்விட்சர்லாந்தில் நடந்த பேச்சு வார்த்தையில் 2 நாடுகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தன.அதன்படி, பதிலுக்கு பதில் இரு நாடுகளும் போட்ட வரி நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக பதற்றம் இன்னும் தணியவில்லை.
உலகிலேயே மிகவும் அரிதான பல கனிமம் சீனாவில் இருக்கிறது. குறிப்பாக மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள், பேட்டரிகள் ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய காந்தப் பொருட்கள் சீனாவில் தான் தயாரிக்கப்படுகின்றன. அதற்கான அரியவகை கனிமங்கள் சீனாவில் மட்டுமே கிடைக்கின்றன. அமெரிக்காவுக்கு இத்தகைய காந்தங்கள் தேவை அதிகம்.
டிரம்ப் வர்த்தக போரை துவங்கியதும் இனி காந்தம் தரமாட்டோம் என்று சொன்னதோடு, அதிரடியாக சப்ளையை சீனா நிறுத்தியது. இதனால் அமெரிக்கா ஆட்டம் கண்டது. காந்த சப்ளையை காரணம் காட்டியே ஒவ்வொரு விஷயத்திலும் சீனா அதிரடி காட்டி வருகிறது.இதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது அதிபர் டிரம்ப் கடும் கோபம் அடைந்தார். காந்தம் தரமாட்டோம் என்றால் சீனாவை அழித்து விடுவோம் என்று மிரட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சீனா எங்களுக்கு காந்தம் தந்தே ஆக வேண்டும். அவர்கள் எங்களுக்கு தராமல் போனால், சீனாவுக்கு 200 சதவீதம் வரி விக்கப்படும்.அப்படி ஒரு பிரச்னை வராது என்று நான் நம்புகிறேன்.
இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் நான் சீனா போவேன். சீனாவுடன் சிறப்பான உறவை ஏற்படுத்த போகிறோம். அதே நேரம் அவர்கள் அமெரிக்காவுக்கு செக் வைக்கும் சில வியூகங்களை வைத்திருக்கின்றனர். அதை விட பெரிய திட்டம் அமெரிக்காவிடமும் இருக்கிறது.
ஆனால் சீனா அப்படி எதையும் செய்யாது என்று நான் நம்புகிறேன்.ஒரு வேளை அமெரிக்காவை அசைத்து பார்க்கும் அந்த வேலையில் சீனா இறங்கினால், அந்த நாட்டுக்கே அது அழிவை ஏற்படுத்தி விடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.