11 மாதங்களுக்கு பின் வெளியே வந்தார் வெனிசுலாவின் மச்சோடா
11 மாதங்களுக்கு பின் வெளியே வந்தார் வெனிசுலாவின் மச்சோடா
ADDED : டிச 12, 2025 05:09 AM

ஓஸ்லோ; அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்காத, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா, 11 மாதங்களுக்குப் பின் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சோடா, 58, ஜனநாயகத்தை மீட்பதற்காக போராடியதற்காக, அவருக்கு இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான நார்வேயின் ஓஸ்லோவில் நேற்று முன்தினம் நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆனால், மச்சோடா பங்கேற்கவில்லை; அவருடைய சார்பில் அவருடைய மகள் விருதைப் பெற்றுக் கொண்டார். பல வழக்குகளில் கைது செய்யப்படலாம் என்பதால், கடந்த ஜனவரிக்குப் பின், பொது நிகழ்ச்சியில் மச்சோடா பங்கேற்காமல், தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில், ஓஸ்லோ நகருக்கு மச்சோடா வந்து சேர்ந்தார். அங்குள்ள ஹோட்டலில் இருந்து தன் ஆதரவாளர்களை அவர் சந்தித்தார். நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வெனிசுலா அரசு தடை விதித்திருந்தது. அவ்வாறு வெளியேறினால், தேடப்படும் குற்றவாளியாக கருதப்படுவார் என்றும் கூறியிருந்தது.
பொது நிகழ்ச்சி ஒன்றில் 11 மாதங்களுக்குப் பின், மச்சோடா பங்கேற்றுள்ளார். வெனிசுலாவுக்கு திரும்பப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

