ஒரே நாளில் 108 செ.மீ., மழை வெள்ளக்காடானது வியட்நாம்
ஒரே நாளில் 108 செ.மீ., மழை வெள்ளக்காடானது வியட்நாம்
ADDED : அக் 29, 2025 12:21 AM

ஹானோய்: வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஹியூ மற்றும் ஹோய் ஆன் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் சுற்றுலாத் தலங்கள் மூழ்கியுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின், மத்திய நகரமான ஹியூவில், 24 மணி நேரத்திற்குள் 108 செ.மீ., மழை பதிவானது. இது வியட்நாமில் இதுவரை பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஹியூவின் வரலாற்று சின்னமான பெர்ப்யூம் நதியில் நீர்மட்டம் 15 அடி உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட பழங்கால நகரமான ஹோய் ஆனிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஹியூ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் வீடுகளை மூழ்கடித்தது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகள்,விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பெங்ஷென் புயல் வியட்நாமை நெருங்கி வருவதால் மத்திய வியட்நாமில் கனமழை பெய்யும், இதன் விளைவாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

