உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது
உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது
ADDED : ஆக 23, 2024 01:43 PM

லண்டன்: இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக பிரிட்டன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பல வெளிநாட்டு பல்கலைகளும், இந்திய மாணவர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அந்த வகையில், உயர்கல்விக்கு விருப்பமான நாடாக பிரிட்டன் திகழ்ந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டன் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்நாட்டு அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக பிரிட்டன் புள்ளி விவரத்துறை அலுவலகம் வெளியிட்ட தகவலில் கூறியுள்ளதாவது: 2024 ம் ஆண்டு கல்வி பயில்வதற்காக 1,10,006 விசாக்கள் வழங்கப்பட்டன. இதில் 25 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. 2019 முதல் 2023 வரை இந்தியர்கள் மற்றும் நைஜீரியர்களுக்கு அதிகளவில் விசா வழங்கப்பட்டது. தற்போது,பிரிட்டன் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் குறைந்துள்ளது.
இது அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வருவாய் குறைந்து விடும் என்ற கவலை உள்ளதால், அதனை எப்படி சமாளிப்பது, பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து அவை யோசித்து வருகின்றன.