தொப்பியை விழுங்கிய நீர் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தொப்பியை விழுங்கிய நீர் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
UPDATED : நவ 20, 2026 12:43 PM
ADDED : நவ 20, 2026 12:42 PM

அமெரிக்காவின் சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் பார்வையாளர் வீசிய தொப்பியை விழுங்கிய 9 வயது நீர் யானை, 'பியோனா' சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இரவுபகலாகக் கவனித்தும் காப்பாற்ற முடியவில்லை என்று கால்நடை மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பியோனா நீர் யானை, சமூக வலைதளங்களின் வழியாக அறிமுகமாகி புகழ் பெற்றது. அதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த வாரம் வந்த பார்வையாளர்களில் ஒருவர் வீசிய தொப்பியை பியோனா தவறுதலாக விழுங்கி விட்டது.
அதிர்ச்சியடைந்த உயிரியல் பூங்கா நிர்வாகிகள், நீர் யானையை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தொப்பியை நீர் யானையின் உடலில் இருந்து வெளியேற்றப் பலமுறை முயன்றும், முடியவில்லை. அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பில்லாத நிலையில், இயற்கையாக தொப்பியை வெளியேற்றும் வழிமுறைகளை கையாண்டனர்.
24 மணி நேரமும் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் பியோனா இருந்தது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், பலனின்றி நீர் யானை உயிரிழந்தது. 'நாங்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறோம்; இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. முடிந்தவரை பியோனா போராடியது' என்று சின்சினாட்டி பூங்கா இயக்குனர் டேவ் ஜெனிக்கே தெரிவித்தார்.
'எங்கள் விலங்குப் பராமரிப்புக் குழுவினர், பியோனாவை காப்பாற்ற சாத்தியமான அனைத்தையும் செய்தனர்; ஆனால் அதன் உடலால் போராட முடியவில்லை. அதன் பூங்கா குடும்பத்தாலும் உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான ரசிகர்களாலும் அது மிகவும் நேசிக்கப்பட்டது. அதன் இழப்பை பலர் ஆழமாக உணர்வர்' என்று அவர் தெரிவித்தார்.
பிறந்தது முதலே போராட்டம்
தாய் பிபிக்குப் குறைப்பிரசவத்தில் பிறந்த பியோனா, வெறும் 29 பவுண்டு எடை மட்டுமே கொண்டிருந்தது. பொதுவாகப் புதிதாக பிறந்த நீர்யானை 55 முதல் 120 பவுண்டு வரை எடையிருக்கும். அது பிழைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை; அதிசயமாக அது பிழைத்துக்கொண்டது.
இரவு பகலாகப் பராமரிக்கப்பட்டது. உள்ளூர்க் குழந்தைகள் மருத்துவமனைகளின் செவிலியர்கள் வந்து, அதன் மிகச் சிறிய நரம்புகளைக் கண்டறிய உதவினர். பூங்கா அதிகாரிகள் தாய் நீர் யானையிடமிருந்து பால் கறந்தும் தரப்பட்டது.
பிறந்த சிறிது நேரத்திலேயே, அதன் பயணத்தைப் பூங்கா ஆவணப்படுத்தத் தொடங்கியது. விரைவில் அது நலம் பெற்று மீண்டது, நேர்மறை எண்ணத்தை பிரதிபலித்தது; அதன் வழியாக உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கானோரின் அன்பைப் பெற்றது. பூங்காவின் சமூக ஊடகப் பக்கத்தில் அதன் வீடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
