நஸ்ரல்லாவின் வாரிசையும் கொன்று விட்டோம்: இஸ்ரேல் ராணுவம் உறுதி
நஸ்ரல்லாவின் வாரிசையும் கொன்று விட்டோம்: இஸ்ரேல் ராணுவம் உறுதி
ADDED : அக் 24, 2024 01:41 AM

பெய்ரூட் 'நஸ்ரல்லா மறைவுக்குப் பின் ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவராக ஹஷேம் சபிதீன் வருவார் என்பதாலேயே அவரை கொலை செய்தோம்' என, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் போரில், ஹமாஸ் தரப்புக்கு லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால், இஸ்ரேல் மீது ஹெஸ்பொல்லா அமைப்பு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி தந்து வருகிறது. சமீபகாலமாக, ஹெஸ்பொல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த மாதம் 27ல் லெபனானின் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இம்மாத துவக்கத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரது வாரிசாகக் கருதப்படும் ஹஷேம் சபிதீன் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இதை ஹெஸ்பொல்லா அமைப்பும் நேற்று உறுதி செய்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'மூன்று வாரங்களுக்கு முன் பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் நிர்வாகக் குழு தலைவர் ஹஷேம் சபிதீன், அதன் புலனாய்வு இயக்குனரக தலைவர் அலி ஹுசைன் ஹசிமா உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்படுகிறது.
'நஸ்ரல்லாவுக்கு அடுத்ததாக புதிய தலைவராக சபிதீன் வருவார் என எண்ணியதாலேயே அவர் கொல்லப்பட்டார்' என, தெரிவித்துள்ளது.

