எந்த அச்சுறுத்தலையும் சமாளிப்போம்: பாகிஸ்தான் முப்படை தளபதி கொக்கரிப்பு
எந்த அச்சுறுத்தலையும் சமாளிப்போம்: பாகிஸ்தான் முப்படை தளபதி கொக்கரிப்பு
UPDATED : டிச 15, 2025 04:37 AM
ADDED : டிச 15, 2025 12:56 AM

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முப்படை தளபதியாக சமீபத்தில் பொறுப்பேற்ற அசிம் முனீர், அந்நாட்டின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் ககுல் பகுதியில் உள்ள ராணுவ அகாடமியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானின் இறையாண்மைக்கு, எல்லை பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் எந்த வெளிப்புற சக்தியையும் முறியடிக்க படைகள் தயாராக உள்ளன. உள்நாட்டிலும் தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராக ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உள்நாட்டில் நிலவும் குழப்பங்களை நீக்கி, அமைதியை நிலைநாட்டுவது ராணுவத்தின் கடமை.
பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதே ராணுவத்தின் முதன்மையான இலக்கு. ஆயுதம் ஏந்திய குழுக்கள் எதற்கும் நாட்டில் இடமில்லை. அமைதியை குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராக ராணுவம் எவ்வித சமரசமும் செய்யாது. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் பாகிஸ்தான் ஒரு கடினமான காலகட்டத்தை கடந் து வருகிறது. இதிலிருந்து நாடு நிச்சயம் மீண்டு வரும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவுடன் நிலவும் பதற்றங்கள் குறித்தும் பேசிய அசிம் முனீர், நம் நாட்டு ராணுவம் தாக்கினால், பதிலடி தர பாக்., ராணுவம் தயாராக இருப்பதாக மறைமுகமாக எச்சரித்தார்.

