50 சதவீதத்துக்கும் மேல் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம்; ராகுல் சமாளிப்பு
50 சதவீதத்துக்கும் மேல் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம்; ராகுல் சமாளிப்பு
ADDED : செப் 12, 2024 10:46 AM

வாஷிங்டன்: '' இந்தியாவில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க நாங்கள் முயற்சி செய்வோம்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் , வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், '' இந்தியாவில் 200 தொழில் ஜாம்பவான்களை எடுத்துக் கொண்டால், அதில் எனக்கு தெரிந்து ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அந்த பட்டியலில் உள்ளார். இந்தியாவில் 50 சதவீத மக்கள் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
கடும் எதிர்ப்பு
அப்படியிருக்க நாம் பிரச்னைக்கு சரியாக கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. இந்த பிரச்னைக்கு இப்போதிருக்கும் தீர்வுகளில் ஒன்று இட ஒதுக்கீடு. எனவே இந்தியா நியாயமான இடத்தில் இருக்கும்போது இடஒதுக்கீடு ரத்து குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசிக்கும். ஆனால், இந்தியா நியாயமான இடத்தில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
இதனையடுத்து தனது பேச்சு குறித்து விளக்கமளித்து ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிராக உள்ளதாக சிலர் என்னை பற்றி தவறாக பிரசாரம் செய்கின்றனர். அதற்கு நான் எதிரானவன் அல்ல என்பதை நான் தெளிவாக சொல்கிறேன். இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கும் மேல் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

