இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்: ஆஸி பிரதமர் திட்டவட்டம்
இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்: ஆஸி பிரதமர் திட்டவட்டம்
ADDED : டிச 19, 2025 08:33 AM

சிட்னி: ஆஸ்திரேலியா மண்ணில் இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்; நாடு முழுவதும் துப்பாக்கியை திரும்ப பெறும் பணி தொடங்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டை கடற்கரையில், கடந்த 14ம் தேதி ஹனுக்கா என்ற யூத பண்டிகையின்போது பொதுமக்கள் மீது இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 16 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது பயங்கரவாத தாக்குதல் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியது சாஜித் அக்ரம், 50, மற்றும் அவருடைய மகன் நவீத் அக்ரம், 24, என, தெரியவந்தது. போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், தந்தை சாஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டான். நவீத் அக்ரம் பிடிபட்டுள்ளான். அவன் மீது கொலை உள்ளிட்ட 59 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
துப்பாக்கச்சூடு நடத்த பயிற்சி
தற்போது அவனிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய இருவரில் இளையவரான நவீத் அக்ரம் துப்பாக்கி கையாளுதல் குறித்து விரிவான பயிற்சி பெற்றதாக சிட்னியை தளமாகக் கொண்ட துப்பாக்கி கிளப்பின் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஆஸி பிரதமர் அறிக்கை
இந்நிலையில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் அதிக துப்பாக்கிகள் உள்ளன. இதைத் தொடர நாம் அனுமதிக்க முடியாது. குடியுரிமை இல்லாதவர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி இல்லை. மேலும், சிட்னியின் புறநகர்ப் பகுதியில் வசிப்பவர் ஒருவருக்கு ஆறு துப்பாக்கிகள் வைத்திருக்கவும் தேவையில்லை.
கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவருக்கு அப்படித்தான் துப்பாக்கிகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்த விட மாட்டோம் துப்பாக்கியை திரும்ப பெறும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்.
பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்காகப் பணியாற்றும் ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் நன்றி. எங்கள் ஆஸ்திரேலிய போலீசார், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறியவும், ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.

