கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்: மோடி
கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்: மோடி
ADDED : நவ 21, 2024 12:43 AM

ஜார்ஜ்டவுன்: பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த 'ஜி - 20' உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின், மற்றொரு தென் அமெரிக்க நாடான கயானாவுக்கு, இரு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்றடைந்தார். 56 ஆண்டுகளில், இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதன்முறை.
உற்சாக வரவேற்பு
தலைநகர் ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவரை, கயானா அதிபர் இர்பான் அலி, பிரதமர் மார்க் அந்தோணி பிலிப்ஸ் வரவேற்றனர்.
இதையடுத்து, இந்தியா - -கயானா இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு சான்றாக, ஜார்ஜ் டவுன் நகரின் சாவியை, அந்நகர மேயர் பர்னி ஜென்கின்ஸ் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து, ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை, கிரெனடா பிரதமர் டிக்கன் மிட்செல், பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி ஆகியோர் வரவேற்றனர். மேலும், ஹோட்டலில் புலம்பெயர்ந்த இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சந்திக்க திட்டம்
இது குறித்து, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'கயானாவில் கிடைத்த வரவேற்பு என் நினைவில் நிலைத்திருக்கும். பல்வேறு துறைகளில், கரீபியன் தீவு நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது' என, குறிப்பிட்டார்.
ஜார்ஜ்டவுனில் இன்று நடக்கும், இந்தியா - கரீபியன் தீவு நாடுகள் அடங்கிய, 'காரிகாம்' கூட்டமைப்பின் இரண்டாவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதைத் தொடர்ந்து, கயானா அதிபர் இர்பான் அலியை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சு நடத்துகிறார். மேலும், கரீபியன் தீவு நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க பிரதமர் மோடி திட்டமிட்டுஉள்ளார்.