நாங்கள் அவரிடம் 50% வசூலிப்போம்: டிரம்ப் வரி விதித்த பிறகு பிரேசில் மிரட்டல்
நாங்கள் அவரிடம் 50% வசூலிப்போம்: டிரம்ப் வரி விதித்த பிறகு பிரேசில் மிரட்டல்
ADDED : ஜூலை 11, 2025 09:13 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிக வரிகளை விதித்ததற்கு, பிரேசில் அதிபர் லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வா, தனது நாடும் அதே பலத்துடன் பதிலடி கொடுக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
உலக மக்கள்தொகையில் 45 சதவீதமும்; பொருளாதார வளர்ச்சியில் 35 சதவீதமும் பங்களிப்பை வழங்கி வரும் பிரிக்ஸ் அமைப்பில், பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா உறுப்பினர்களாக உள்ளன. பட்டியலில் உள்ள வரி போக, கூடுதலாக காப்பர் இறக்குமதிக்கு 50 சதவீதமும்; மருந்து பொருட்களுக்கு 200 சதவீதம் வரையும் வரி விதிக்க இருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
குறிப்பாக பிரேசிலுக்கு 50% வரி விதித்து டிரம்ப் அதிரடி காட்டியுள்ளார். இது, வர்த்தக போர் அபாயத்தை அதிகரித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிரேசில் அதிபர், லூயிஸ் இன்சியோலுலா டா சில்வா கூறியதாவது:
முதலில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்போம், ஆனால் பேச்சுவார்த்தை இல்லை என்றால், பரஸ்பர சட்டம் நடைமுறைக்கு வரும். அவர்கள் எங்களிடம் 50 சதவீத வரி வசூலிக்கப் போகிறார்கள் என்றால், நாங்கள் அவர்களிடம் 50% வரி வசூலிப்போம்.
இந்த பிரச்னையைத் தீர்க்க பிரேசில் உலக வர்த்தக அமைப்பை (WTO) நாடக்கூடும்.நாங்கள் சர்வதேச விசாரணைகளைக் கேட்கலாம். மேலும் இது குறித்து விளக்கங்களைக் கோரலாம். பிரேசில் பதிலளிக்கத் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.