காங்., கட்சியினர் தாக்கியதாக புகார் அமெரிக்காவில் இந்திய செய்தியாளருக்கு என்ன நடந்தது ?
காங்., கட்சியினர் தாக்கியதாக புகார் அமெரிக்காவில் இந்திய செய்தியாளருக்கு என்ன நடந்தது ?
UPDATED : செப் 15, 2024 02:30 AM
ADDED : செப் 15, 2024 02:01 AM

டெக்சாஸ்: அமெரிக்காவில் காங். அயலக அணி பொறுப்பாளர் சாம்பிட்ரோடாவிடம் இந்தியா டுடே அமெரிக்க செய்தியாளர் ரோஹித் சர்மா பேட்டி எடுத்த போது காங். கட்சியினரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சிதலைவரும், காங்.,எம்.பி.யுமான ராகுல், அமெரிக்கா சென்றார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கு ஜாதி, மதம், இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த இவரது பேச்சு, விமர்சனத்தையும் சர்ச்சையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ராகுல் அமெரிக்கா சென்றடைவதற்கு முன்பாக அங்கு டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் இந்தியா டுடே செய்தி சேனலின் ரோஹித் சர்மா என்ற செய்தியாளர் , காங்கிரஸ் அயலக அணி பொறுப்பாளர் சாம்பிட்ரோடாவை சந்தித்து பேட்டி கண்டார். அப்போது வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்தும் இந்துக்கள் கொல்லப்பட்டது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கு சாம்பிட்ரோடா பதில் அளிக்கும் முன்பே அங்கிருந்த காங். கட்சியினர் சிலர் ரோஹித் சர்மாவை மேலும் கேள்வி கேட்கவிடாமல் தகராறு செய்து, அத்துமீறினர். அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து, அதில் பதிவான வீடியோ காட்சிகளை அழித்தனர்.
இது தொடர்பாக ரோஹித் சர்மா அழுது கொண்டே வீடியோவை வெளியிட்டார். அதில் கடந்த 7-ம் தேதியன்று டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் சாம்பிட்ரோடாவை சந்தித்து பேட்டி எடுத்தேன். அப்போது அவருடன் 20 முதல் 30 பேர் வரை இருந்தனர்.
திடீரென என்னை தாக்கியதுடன் எனது மொபைல் போனை பறித்து அதில் இருந்த தகவல்களை அழித்து மிரட்டினர் என்றார்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர், மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசியல் சாசனத்தை மதிப்பாக கூறி கொண்டிருக்கும் காங்.கட்சியினர் அரசியலமைப்பின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளரான நம் இந்திய மைந்தனுக்கு அவமதிப்பை ஏற்படுத்திவிட்டனர் என மோடி கூறினார்.