வயசு முக்கியமில்லை பிகிலு: 102 வயதில் வானில் 'ஸ்கை டைவிங்' செய்தார் மூதாட்டி!
வயசு முக்கியமில்லை பிகிலு: 102 வயதில் வானில் 'ஸ்கை டைவிங்' செய்தார் மூதாட்டி!
ADDED : ஆக 26, 2024 02:16 PM

லண்டன்: 102 வயதான பிரிட்டன் பெண்மணி மெனட்டே பெய்லி தனது பிறந்தநாளில், 2100 மீட்டர் உயரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.
பிரிட்டனை சேர்ந்தவர் மூதாட்டி மெனட்டே பெய்லி. இவருக்கு வயது 102. வயதானாலும், இவர் இளம் வயதினர் போல சாகசம் செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தனது பிறந்தநாளில் ஏதாவது சாகசம் செய்து அசத்தி காட்டிவிட வேண்டும் பெய்லிக்கு தோன்றியுள்ளது.
'ஸ்கை டைவிங்'
பிறந்தநாளில் அவர் 2,100 மீட்டர் உயரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தினார். 7 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்து பிரிட்டனின் மிக வயதான ஸ்கை டைவர் ஆனார். 3 தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மூதாட்டி சொல்வது என்ன?
வயதானாலும் முயற்சி செய்தால், எதையும் சாதித்து காட்டலாம் என நிரூபித்து காட்டிய 102 வயது மூதாட்டி கூறியதாவது: ஸ்கை டைவிங் செய்யும் போது கண்களை இறுக மூடிக்கொண்டேன். நான் மிகவும் வேகமாக பயணிப்பது போல் தோன்றியது. எனது செயல் வயதானவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் என நம்புகிறேன்.
முதுமையின் ரகசியம்
நான் சுறுசுறுப்பாக செயல்படுவற்கு காரணம் என்ன என்றும், முதுமையின் ரகசியம் என்ன என்று மக்கள் அடிக்கடி கேட்கின்றனர். நிச்சயமாக இது அதிர்ஷ்டம். நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்றார்.

