ரஷ்யா இடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா: ஜெய்சங்கர் பதில்
ரஷ்யா இடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா: ஜெய்சங்கர் பதில்
ADDED : பிப் 18, 2024 11:40 AM

பெர்லின்: ஜெர்மனியில் பல்வேறு நாட்டு அமைச்சர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில், தொகுப்பாளர் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு 'எங்களிடம் திறமை உள்ளது, ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குகிறோம்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார்.
ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வ தேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கேள்வி
ஒருபகுதியாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அனலினா பியர்பாக் ஆகியோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதும் உங்கள் எதிர்தரப்பில் உள்ள அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதா? என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
பதில்
இதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில்: எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளனவா? என்பது உங்கள் கேள்வி. எங்களிடம் திறமை உள்ளது, ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குகிறோம். நிறைய வாய்ப்புகளை உருவாக்க எங்களிடம் திறமை இருக்கும்போது அதற்காக நீங்கள் எங்களை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சிக்கக்கூடாது.
இது மற்றவர்களுக்கு ஏதேனும் பிரச்னையை உருவாக்குமா என்றால் நிச்சயம் உருவாக்காது. வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு வரலாறுகள் மற்றும் சவால்கள் உள்ளன. ஆனால் மற்ற நாடுகளுடன் உறவை கொண்டிருப்பது மிகவும் கடினம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.