ஆப்கன் மீது எப்போது தாக்குதல்: நல்ல நேரத்துக்கு காத்திருக்கிறது பாகிஸ்தான்
ஆப்கன் மீது எப்போது தாக்குதல்: நல்ல நேரத்துக்கு காத்திருக்கிறது பாகிஸ்தான்
ADDED : ஜன 30, 2026 06:30 AM

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, சரியான நேரத்திற்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனும் எல்லை பகிர்ந்து கொள்கிறது. டி.டி.பி., எனப்படும் தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு, ஆப்கனின் தலிபான் அரசு ஆதரவளிப்பதாக, பாக்., தொடர்ந்து கூறி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே பாக்., - ஆப்கன் எல்லையில், தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பேட்டி ஒன்றில் ஆப்கன் குறித்து பேசியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அவர் கூறியுள்ளதாவது: கடந்த, 2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்தபோது ஏற்பட்ட நம்பிக்கை இப்போது முற்றிலும் அழிந்துவிட்டது. பாகிஸ்தானின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எங்கள் எதிரிகளுக்கு ஆதரவு அளித்தால் பதிலடி தராமல் விடமாட்டோம்.
அண்டை நாடுகளில் அரசியல் குழப்பங்கள், போர் என மோசமான நிலைமை உள்ளது. இதனால், இது ஆப்கனை தாக்க சரியான நேரம் அல்ல. ஆனால் நிச்சயமாக தலிபான்களுக்கு எதிராக பாக்., நடவடிக்கை எடுக்கும். அது எங்களுடைய வசதிக்கு ஏற்ப நடை பெறும். இந்த நடவடிக்கை ராணுவ ரீதியானதாக இருக்கலாம் அல்லது துாதரக உறவுகளை முறித்துக் கொள்வது போன்றவையாக இருக்கலாம்.
டி.டி.பி., போன்ற பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கி, பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதற்கு காபூலில் உள்ள தலிபான் அரசே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

